சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இன்றைய நீதி கோரிய ஜனநாயகப் போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் இன்று (ஆகஸ்ட் 30) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதையொட்டி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயகப் போராட்டங்கள் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீதி கோரிய போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சமூக அமைப்புக்களால் இன்று முற்பகல் 9.00 மணிக்கு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடைபவனியாக இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழரசுக் கட்சி வழங்குகின்றது. இன்றைய தினம் உணர்வுபூர்வமான எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்குப் பலம் சேர்க்குமாறு உரிமையோடு எமது உறவுகளின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.