திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 14 பேருக்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலையில் தமிழர் குடியிருப்புக்களின் மத்தியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்ததைத் தொடர்ந்து, பிக்குகள் காட்டுத்தனமாகச் செயற்பட்டு, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்குள் புகுந்து குழப்பம் விளைவித்திருந்தனர்.
விகாரை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அரச காணிக்குள் பிக்குகள் நுழைய பிரதேச செயலாளர் தடை விதித்திருந்தார். பிக்குகள் குழப்பம் விளைவித்ததைத் தொடர்ந்து, அந்தத் தடையுத்தரவு விலக்கப்பட்டிருந்தது.
இதையடுத்துப் பெரியவெளி சந்தியில் நாளை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், அதற்கு எதிராக விகாராதிபதி தரப்பினரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனவும், இது இன முறுகலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டி நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்குத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட போராட்டத் தரப்பினர் 7 பேருக்கும், விகாராதிபதி உள்ளிட்ட விகாரைக்கு ஆதரவானவர்கள் 7 பேருக்கும் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.