கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி காணப்படும் சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தனர்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, இன்று புதன்கிழமை (06) காலை 8 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசு கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கி.சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த ஜூன் 29ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் நீர்க்குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.