“முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் தொல்பொருள் பிரிவினரால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வுப் பணிகள் நாளை வியாழக்கிழமையும் தொடரும்.”
– இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மாலை நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
ஏற்கனவே தோண்டப்பட்ட புதைகுழியிலுள்ள மண் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் முக்கியமாகத் தொல்பொருள் பிரிவினரால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியானது நாளை வியாழக்கிழமையும் தொடரும்.
இது சம்பந்தமான விபரங்கள் ஊடகங்களுக்குத் தினந்தோறும் அறியத்தரப்படும்.” – என்றார்.