செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு

உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு

1 minutes read

அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த  மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் கடந்த புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பேசாலை முருகன் கோவில் பகுதியில் புதன்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.

இதில்  20 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இம்மரணம் தொடர்பாக முசலி மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட மரண விசாரணையின்போது மாணவனின் தந்தை மற்றும் உறவினரொருவர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இதன்போது தந்தை தெரிவிக்கையில்,

மகன் எங்கள் பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி பயின்றார். இவர் தனது கல்வி பொது தராதர உயர்தர வகுப்பில் விஞ்ஞான பாடங்களைக் கற்று, அதற்கான பரீட்சையிலும் தோற்றியிருந்தார்.

பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தபோது இவர் ஒரு பாடத்தில் மட்டுமே சித்தி அடைந்திருந்தார். இதனால் அவர் மிகவும் விரக்தியுடன் காணப்பட்டார். இருந்தபோதும் நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறி, ‘அடுத்த தடவை பரீட்சையில் நல்ல முறையில் படித்து, சித்தி பெறலாம்’ என தேற்றினோம்.

தற்போது எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை (06) மகன் தாயையும் தங்கையையும் மாலை 07 மணியளவில் கோவிலுக்குச் செல்லும்படி அனுப்பி வைத்திருந்தார். அதேவேளை, மகன் வீட்டுக்குள் இருக்க, நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன்.

அந்நேரம் மகனை நான் அழைத்தபோது அவர் எனக்கு பதிலளித்தார்.

பின் சிறிது நேரம் கழித்து நான் முட்டை பொரிப்பதற்காக சமையல் அறைக்குள் சென்று அவரை அழைத்தபோது பதில் கிடைக்கவில்லை.

அதன் பின்னரே நான் அறைக்குள் எட்டிப் பார்த்தபோது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கியவாறு காணப்பட்டார்.

பின் அயலவர்களை அழைத்தபோது எங்கள் உறவினர் ஒருவர் ஓடிவந்து, மகனின் சுருக்குக் கயிற்றை அறுத்து, மகனை மீட்டோம்.

உடனே, அவரை பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்தோம். ஒரு மணித்தியாலமாக வாகனமின்றி தவித்துக்கொண்டிருந்தோம்.

அதன் பின்னரே வைத்தியசாலைக்கு மகனை கொண்டு சென்றோம். அவ்வேளை மகன் இறந்துவிட்டார் என எமக்கு மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது என்றார்.

உயிரிழந்த மாணவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More