சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை தோற்கடிக்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்த்தன நேற்றுமுன்தினம் புதன்கிழமை சபையில் முன்வைத்திருந்தார்.
மருந்துத் தட்டுப்பாடு, தரமற்ற மருந்துக் கொள்வனவு, மருத்துவ சிகிச்சையின் போதான மரணங்கள், பாதிப்புக்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணை மீது நேற்றுமுன்தினம் தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் விவாதம் இடம்பெற்றது. இன்று மாலை 5.35 மணிக்கு விவாதம் முடிவுக்கு வந்தது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபை அனுமதிக்கின்றதா எனச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு வேண்டுமெனக் கோரினார். அதன் பிரகாரம் மாலை 5.40 மணிக்கு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் எம்.பிக்களும், சுயாதீன எதிரணி எம்.பிக்களும் என 73 பேர் வாக்களித்தனர்.
அதேவேளை, பிரேரணைக்கு எதிராக அரச தரப்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள், சுயாதீன எதிரணி எம்.பிக்களான நிமல் லான்சா, ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி என 113 பேர் வாக்களித்தனர்.
இதன்பிரகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை 40 மேலதிக வாக்குகளால் அரசு தோற்கடித்தது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 38 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.