இலண்டனில் இளம் திறமையாளர்களுக்கான களமாக “இசைகளின் சங்கமம்” நிகழ்வு வெகு சிறப்பாக தெற்கு இலண்டனில் இடம்பெற்றது.
சிகரம் அமைப்பின் வருடாந்த நிகழ்வான இசையால் வாழும் இதயங்களின் பேரரங்கமாக அமைந்த “இசைகளின் சங்கமம்” நிகழ்வு செப்ரம்பர் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பம் ஆகியது.
இசைத்துறையில் வளர்ந்துவரும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த நிகழ்வின் மூலம் புலம்பெயர் தேசத்தில் தமிழரின் திறமையை வெளிக்கொணரும் களமாக இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் அஜேஷ் கடந்த இரண்டு வாரங்களாக இந்த இளையோருக்கு பயிற்சி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இலண்டன் மண்ணின் கலைஞர்களையும் விருந்தினர்களையும் செங்கம்பள அணிநடையுடன் கௌரவித்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பலரும் தமது இசையாலும் நடனத்தாலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
கண்களை கவரும் நடனங்களுடன் இசை நிகழ்வுகளை கண்டு களிக்க பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.