திருகோணமலையில் இன்று இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களவர்களால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீது திருகோணமலையின் கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகாமையில் வைத்தும், சர்தாபுர சந்திக்கு அருகாமையில் வைத்தும் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு இடங்களிலும் கற்கள், கொட்டன்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் திலீபனின் திருவுருவப் படமும், அதைத் தாங்கி வந்த வாகனமும் சேதமடைந்துள்ளன.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மற்றும் செயற்பாட்டாளர்களான கண்ணன், பிரேம் ஆகியோர் மீதும் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்க்க இந்த மோசமான தாக்குதல்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீதும், எம் மீதும் நடத்தப்பட்டுள்ளன” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தீலிபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாகப் பயணித்த ஊர்தியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஒரு குழுவினர் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து மாற்று வீதியால் ஊர்தி பயணித்தது.
இந்நிலையில், இன்று திருகோணமலையில் இரு இடங்களில் வைத்து தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களவர்களால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.