திருகோணமலையில் உள்ள மலர்ச்சாலையொன்றின் வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது அவ்வீதியால் வேகமாகப் பயணித்த மலர்ச்சாலை வாகனம் மோதியுள்ளது.
இதன்போது அந்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்ற நபரே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மலர்ச்சாலை வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள உப்புவெளி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.