“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்குத் தயார் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார்.”
– இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நளின் பண்டார என்னைக் கடுமையாக நாகரிகமற்ற வகையில் விமர்சித்துள்ளார். என்னைக் “கொலையாளி” என்று விமர்சித்துள்ளார். ஆகவே, அந்த வார்த்தையை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வேண்டுகின்றேன்.
எனது ஊடக செயலாளராக இருந்த அன்ஷிப் ஆஸாத் மௌலான புகலிடக் கோரிக்கைக்காக என் மீது பாரிய பழியைச் சுமத்தியுயள்ளார். ஒருவகையில் இந்த மௌலானா வெற்றி பெற்றுள்ளார். ஏனெனில் அவர் பிரபல்யமடைந்துள்ளார். அவரது புகலிடக் கோரிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான் விலகியதன் பின்னர் புலிகள் அமைப்பு பலவீனமடைந்து தோல்வியடைந்தது என்று என் மீது வெறுப்புக் கொண்டுள்ள நாடு கடந்த தமிழர் அமைப்புக்கள் ஆஸாத் மௌலானாவின் பின்னணியில் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான உரிமைகளை நான் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளதால் அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அமைப்புக்கள் என் மீது வெறுப்புக்கொண்டுள்ளன. மறுபுறம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் தலைமைகளும் என்னை வீழ்த்த இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக எடுத்துள்ளன.
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு 2020.10.08 ஆம் திகதி முன்னிலையானபோது சிறைச்சாலையில் இருந்தபோது சந்தித்தவர்களையும், பேசப்பட்ட விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன். நான் சாட்சியமளிக்கச் செல்லும்போது ஆஸாத் மௌலானாவும் என்னுடன் வருகை தந்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள். பயங்கரவாதி சஹ்ரான் பல பகுதிகளில் பயிற்சிக் கூடங்களை நடத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஒன்றும் அறியாதவர் போல் தற்போது கருத்துத் தெரிவிகின்றார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கலீமா என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பேசுகின்றார்கள். எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்.
அடிப்படைவாத கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் உள்ளார்கள். தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். பிரதேச பொலிஸ் சேவைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்குத் தயார் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார். முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், ஜே.வி.பி.யினரும் என்னை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நான் தவறு செய்யவில்லை. எனது கையில் இரத்தக்கறையில்லை. எனவே, எனது அரசியல் பயணம் தொடரும். அதனை யாரும் தடுக்க முடியாது.” – என்றார்.