செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகள் பிணை எடுப்பு!”

“நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகள் பிணை எடுப்பு!”

1 minutes read

“என் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விடுவிக்காது விட்டால் இனக்கலவரம் வெடிக்குமென திருகோணமலை நீதிமன்றத்தை அச்சுறுத்திப் பிக்குகளும், பொலிஸாரும் அவர்களைப் பிணையில் எடுத்துள்ளனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய கஜேந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“தியாகி தீலீபனின் நினைவு ஊர்தி மீது அக்கரைப்பற்றில் வைத்து சிலர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதனை ஒரு வன்முறையாகவும் மாற்றும்  முயற்சி இடம்பெற்றது.  அதில் ஒரு சிலர் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான  ஏற்பாட்டை அக்கரைப்பற்று இராணுவ முகாமில் உள்ள உளவுத்துறையினர்தான் செய்திருந்தனர். முஸ்லிம் மக்கள் எமக்கு எதிராக எங்குமே செயற்படவில்லை.

தொடர்ந்தும் எமது  தியாகி திலீபனின் நினைவு ஊர்தி பயணிக்கும்போது முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இராணுவ முகாமுக்கு முன்பாக ஒரு கூட்டம் எமக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அந்த இராணுவ முகாமையைச் சேர்ந்த பண்டார மற்றும் தினேஷ் போன்ற இராணுவ உளவாளிகள்தான் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். அதே கும்பல் எங்களை முந்திச் சென்று வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.

தொடர்ந்து திருகோணமலையை நோக்கி நாம் பயணிக்கும்போது சேருவிலவில் வைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் எங்கள்  மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நாம் இரவாகிவிட்டதால் அந்த இடத்துக்குச் செல்லாமல் வேறு வழியூடாகச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக்கொண்டோம்.

17ஆம் திகதி நாம் தம்பலகாமத்திலிருந்து திருகோணமலையை நோக்கிப் பயணித்தபோது சர்தாபுர பகுதியில் வைத்து எங்கள் மீது காடைத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நாம் ஊர்திப் பவனியை ஆரம்பித்த இடத்திலிருந்து  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் வரை எமக்கு முன்னும் பின்னும் புலனாய்வுத் துறையினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர். அவர்களின் விபரங்கள் தம்பலகாமம் பொலிஸில் எம்மால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் எங்கள் மீது சர்தாபுரத்தில் வைத்து மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

என்னை ஒரு எம்.பி. என்று தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்தவர்கள் சிங்கக்கொடிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு அந்தக் கொடிகளின் கட்டைகளினாலும்  தலைக்கவசத்தாலும் என்னைக் கடுமையாக தாக்கினர். அத்துடன் எமது  கட்சியின் அமைப்பாளர்கள் மீதும் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பின்னர் வியாழக்கிழமை  திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தைப் பொலிஸாரும், 9 பிக்களும் அச்சுறுத்தி சந்தேகநபர்களைப் பிணையில் எடுத்துள்ளனர். அவர்களுக்குப் பிணை கொடுக்காது விட்டால் இனக் கலவரம் வெடிக்குமென அச்சுறுத்தியே அவர்களைப் பிணையில் எடுத்துள்ளனர். இந்த நிலை தொடருமா இருந்தால் நாட்டிலே மிகப்பெரிய மோசமான நிலைமைகள் உருவாகும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More