மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் 20 பவுண் நகைகளைத் திருடினர் என்ற குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்தார்.
அந்த பஸ் வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாகப் பயணித்தபோது குறித்த பெண் பஸ்ஸில் இருந்து இறங்கினார். இதன்போது அந்தப் பெண்ணின் கைப்பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல்போனமையை அவதானித்தார். உடனடியாக பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸுக்குள் தேடியபோதும் நகை கிடைக்கவில்லை.
இதையடுத்து வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸில் அந்த ஆசிரியர் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயதிலகவின் வழிகாட்டலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா, திலீப், பொலிஸ் கான்டபிள்களான உபாலி, தயாளன், இரேசா உள்ளிட்ட குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் என 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டன எனக் கூறப்பட்ட 20 பவுண் நகை, ஓட்டோ மற்றும் பட்டா ரக வாகனம் என்பனாவும் பொலிஸாரால் கைப்பறப்பட்டன.
மேலதிக விசாரணையின் பின் நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.