இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்க நேரிட்ட மிலேச்சன சித்திரவதைகள் தொடர்பாக பிரதான கவனத்தைச் செலுத்தி அவர்கள் இராஜாங்கச் செயலாளருக்குக் கடிதத்தை அனுப்பி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை முறையாக பொறுப்புக்கூற வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் லீ மற்றும் பில் ஜோன்சன் ஆகியோர் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்கவிடம் கோரியுள்ளனர்.
இலங்கையில் இன்னும் குற்றவாளிகள் அனுபவிக்கும் தண்டனையின்மை அந்நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நாடு என்ற வகையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை எதிர்த்து அவற்றை நிறுத்துவதற்குப் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 12 காங்கிரஸ் உறுப்பினர்களும், இலங்கை அரச தரப்பினரும் அதன் இராணுவத்தினரும் கடுமையாகச் சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான நடந்த போரில் இலங்கை அரச தரப்பினரும் இராணுவத்தினரும் சர்வதேச சடடங்களை மீறும் குற்றங்களைச் செய்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போர் சூன்ய பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தமிழ் மக்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பொதுமக்களின் சொத்துக்கள் மீது இலங்கை இராணுவம் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியது.
2009 ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நடைமுறையில் இல்லாவிட்டாலும், கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் கலாசாரம் இலங்கையில் இருக்கின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரித்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, இலங்கை அரசு பல போர்க் குற்றவாளிகளுக்கு உயர் அரசியல் அல்லது இராணுவத் தலைமைப் பதவிகளைப் பரிசாக வழங்கியுள்ளது.
நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் உறுதியான முன்னேற்றம் ஏற்படாதமைக்கு இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.