செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை! – மனோ சீற்றம்

சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை! – மனோ சீற்றம்

1 minutes read

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் சம்பவம், இலங்கையைச் சந்தேகமில்லாமல் ஒரு தோல்வியடைந்த நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலைமை தமிழ் தேசியவாதிகள் மனங்களில் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தும் எனவும் நான் அஞ்சுகின்றேன்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

“இந்நிலை திடீரென வரவில்லை. சிங்கள போலி தேசப்பிரேமிகள், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பகிரங்கமாக தமிழ் நீதிபதிகளை விமர்சித்து, பயமுறுத்தி கொண்டிருந்தார்கள். இலங்கையின் தேசிய தளத்தில் இயங்கும் சிங்கள ஜனநாயக அரசியல்வாதிகளும், முன்னோடி சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும், திட மனதுடன் இதைத் தடுத்து, நிறுத்தி, சட்டத்தின் ஆட்சி என்ற தத்துவத்தைப் பாதுகாக்கத் தவறி விட்டார்கள். இது சிங்கள ஜனநாயக அரசியல்வாதிகளுக்கும், சிவில் சமூகத்தினருக்கும் சத்திய சோதனை” – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தமது பதவியை இராஜிநாமா செய்து விட்டு, நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“சட்டத்தின் ஆட்சி என்பது “அதிகாரப் பகிர்வு”, “பொறுப்புக்கூறல்” என்பன போன்ற மாற்றுக்கருத்துகள் கொண்ட விடயமல்ல. சட்டத்தின் ஆட்சி என்பது தொடர்பில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இங்கே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல், நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவாலாக விளங்குகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடன் நாடு திரும்பி இதற்கு பதிலளிக்க வேண்டும். சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் பதிலளிக்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும்படி நாம் எப்போதும் போராடி வந்துள்ளோம். ஆனால், அரசு தரப்பில் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்கவில்லை.

மாத்தளையிலும், இரத்தினபுரியிலும் பெருந்தோட்டங்களில் அத்துமீறிய காணி பிடிப்பை தடுக்கிறோம் எனச் சட்டத்தைக் கையில் எடுத்து பெருந்தோட்ட முகாமையாளர்கள் குழுவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். அத்துமீறிய காணி பிடிப்பை அகற்ற சட்டப்படி நீதிமன்ற ஆணைகளை பெற வேண்டும் என நாம், தமிழ் முற்போக்குக் கூட்டணியாக சகோதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளை இடை நிறுத்தி கடுமையாக போராடிய பிறகுதான், மாத்தளை ரத்வத்தை தோட்ட உதவி முகாமையாளர் ஒருநாள் கைது செய்யப்பட்டார். ஆனால், இரத்தினபுரியில் வன்முறையில் ஈடுபட்டு கடும் தாக்குதல் நடத்திய பெருந்தோட்ட முகாமைத்துவ குழுவினர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

வடக்குக்குச் சென்று தலைகளைக் கொய்து வருவேன் என்று பகிரங்கமாக சொல்லிய ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படவில்லை. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற வேளையில், அடாத்தாக உள்ளே சென்று அரசாங்கக் கடமைகளைத் தடுத்து சட்டத்தை மீறிய, பெளத்த மதகுருமார் கைது செய்யப்படவில்லை. தமிழ் நீதிபதிகளை விமர்சித்து, பயமுறுத்தி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அரசு தரப்பு அரசியல்வாதிகளை அரசு  கட்டுப்படுத்தவில்லை.

ஆகவே இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை. எனவே இந்நாடு ஒரு தோல்வியடைந்த நாடு. இது சிங்கள ஜனநாயக அரசியல்வாதிகளுக்கும், முன்னோடி சிவில் சமூகத்தினருக்கும் சத்திய சோதனை காலம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More