முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நீதிபதி ரி.சரவணராஜா குருந்தூர்மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாகத் தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் ரவிகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசின் கோரமுகம் வெளிப்படுகின்றது. நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ் மக்கள் எவ்வளவு கொடூரமான அரசின் கீழ் கொடூரமான அரசை நடத்திக்கொண்டிருக்கும் இனவாதிகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்திலே நீதியின்பால் அவருக்குக் கொடுக்கப்பட்ட மன அழுத்தங்கள், உயிர் அச்சுறுத்தல்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு இப்படியான நெருக்கடிகள் இலங்கையிலே ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து மக்களுக்கான தீர்வுத் திட்டங்களையோ அல்லது மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமையையோ ஏற்படுத்தித் தரவேண்டும்.” – என்றுள்ளது.