புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலுக்கு விக்கி காட்டமான கடிதம்!

ரணிலுக்கு விக்கி காட்டமான கடிதம்!

2 minutes read

தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சீற்றத்தின் உச்சிக்குச் சென்றிருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இவ்விடயங்களில் தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், காட்டமான வாசகங்கள் அடங்கிய – தனிப்பட்ட – கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நேரடியாக அனுப்பி வைத்திருக்கின்றார் என்று நம்பகரமாக அறியவந்தது.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்களின் சாராம்சம் இதுதான்:-

“உங்களின் அண்மைக்கால வெளிநாட்டு விஜயத்தின் முழு வெற்றியையுமே நீங்கள் ஜேர்மன் ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டி அப்படியே களங்கப்படுத்தி விட்டது. நீங்கள் கடும் போக்குவாத சிங்கள வாக்காளர்களின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக அப்படிச் செய்திருக்க கூடும். ஆனால், அதனால், எதிர்வரும் தேர்தலில் சிங்களவர்கள் அல்லாதவர்களின் கணிசமான – குறிப்பிடத்தக்களவு – வாக்குகளை நீங்கள் இழப்பீர்கள். சிங்கள வாக்குகள் சிங்கள வேட்பாளர்கள் மத்தியில் பிரிக்கப்படுவனவாகிவிடும். தமிழர்களோ பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவர் குறித்து சிந்திக்கத் தலைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.” –  என்று சாரப்பட தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நீதியரசர் விக்னேஸ்வரன், உறுதியளித்த பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றாதமையையும் கடுமையாகச் சாடி இருக்கின்றார் எனத் தெரிகின்றது.

“நீங்கள் வாக்குறுதி அளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாகாண சபைகள் தொடர்பில் கலாநிதி விக்னேஸ்வரனின் கீழான ஆலோசனை சபையை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும் ஏற்பாடு நடைபெறவில்லை. ஆளுநர் மாற்றம் நடக்கவில்லை. அதே ஆளுநர் மாறாமல் தொடர்கிறார். வடக்கு மாகாண பிரதம செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் பதவிகளில் தொடர்கின்றனர். எங்கள் ஆதரவாளர்கள் இவற்றால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த விடயங்களில் எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் தாமதமடைவதற்கு யாது காரணம் என நாம் ஐயுறுகின்றோம்.

உங்களுக்கு தமிழர்களின் ஆதரவும் வாக்கும் தேவையில்லை எனின், நீங்கள் அதனை வெளிப்படையாக எங்களுக்குக் கூறலாம். நாங்களும் எங்கள் தரப்பினருக்குத் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டத் தேவையில்லை.
– என்று சாரப்பட நீதியரசர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று தெரிகின்றது.

கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் ஓர் ஆலோசனைச் சபையே மாகாண சபை நிர்வாகத்தை ஆளுநருடன் சேர்ந்து முன்னெடுக்கத்தக்க வகையிலான ஓர் ஏற்பாட்டுக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கினார் என்று கூறப்படுகின்றது. அந்த ஆலோசனைச் சபைக்கு அதிகாரம் அளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அதனை செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து இயக்குவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தாராம்.

வடக்கு மாகாண ஆளுநராக 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் மற்றும் மாகாண சபை விடயங்களை கையாளக்கூடிய தகுதி உடைய ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி ரணில் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் உறுதி கூறியிருந்தார் என்று கூறப்படுகிறது.

தமிழ் மொழி அமுலாக்கத்துக்காகவே வடக்கு மாகாண சபை உள்ள நிலையில் அதன் பிரதம செயலாளராக, தமிழ் தெரியாத சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலைமையை மாற்றுவதற்கும் – வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் பதவியை மத்திய அரசின் உயர் அதிகாரியே கையாளும் முறைமையை மாற்றவும் –
நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் வாக்குக் கொடுத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.

அவை தொடர்பில் எந்தவித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காத ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் சீற்றம், எரிச்சல் மற்றும் ஏமாற்றத்தில் இருக்கின்றார் எனத் தெரிகின்றது. அதன் விளைவே அவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதம் என்றும் கூறப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More