செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலைநாடும் மயிலத்தமடுவும் ரணிலின் பட்டியலில் கடைசியா? – மனோ கடும் சீற்றம்

மலைநாடும் மயிலத்தமடுவும் ரணிலின் பட்டியலில் கடைசியா? – மனோ கடும் சீற்றம்

3 minutes read
“கொழும்பாக இருந்தாலும், மலைநாடாக இருந்தாலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், எங்களுக்கு இனியும் இருட்டறையில் நின்று வழி தேடி தடுமாற முடியாது. ஆகவே, எத்தனை பிரதமர் ரணில்? எத்தனை ஜனாதிபதி ரணில்? எத்தனை வாக்குறுதி? மலைநாடும், மயிலத்தமடுவும் உங்கள் பட்டியலில் கடைசியா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

கொழும்பில் நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் குழுக் கூட்டத்தின் பிறகு ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ஆம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்தார். 13 ஆவது திருத்தம் அமுல் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். அப்புறம் 13 இல் பொலிஸ், காணி மைனஸ் எனவும்  வாக்குறுதி அளித்தார். அப்புறம் எம்.பி. விக்னேஸ்வரனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வடக்கில் மாகாண நிர்வாகக் குழு அமைப்போம் எனவும் வாக்குறுதி அளித்தார். தொல்பொருள் திணைக்களத்தை அழைத்து காணிகளை விடுவியுங்கள் எனவும் கட்டளை இட்டார். திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகினாரே தவிர ஜனாதிபதியின் கட்டளை நிறைவேறவில்லை.

பிறகு அவரது அரசு தேர்தல்களைப் பிற்போட சர்வஜன வாக்கெடுப்பு என்று பேசுகின்றது. அவர் நேரடியாகச் சொன்னாலும், அவருக்கு நேரடி நெருக்கமாக அவரது அரசில் இருப்போர் சொன்னாலும் எமக்கு ஒன்றுதான். இப்போது  ஜனாதிபதி முறைமையை அகற்றப் போகின்றேன் என்கிறார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை துணைக்கு அழைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் எனவும் சொல்லாமல் சொல்கின்றார்.

பிரிட்டிஷ் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசை அழைத்து, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு வெடிப்பு விசாரணையைக்  கையளிப்போம் என நாடாளுமன்றம் வந்து வாக்குறுதி அளித்தார். இப்போது ஜேர்மனிக்குப் போய் சர்வதேச விசாரணை கிடையவே கிடையாது என்கின்றார். உள்ளூரில் மீண்டும் நாடாளுமன்றக் குழு அமைப்பதாகச்  சொல்கின்றார்.

பெருந்தோட்டத் துறையில் காணிப் பிரச்சினைக்கு இதோ தீர்வு, அதோ தீர்வு என்று இவரது அரசாங்க அமைச்சர்கள் இரண்டு பேர், ஒருவர்  பெருந்தோட்டம், அடுத்தவர் தோட்ட உட்கட்டமைப்பு, சொன்னார்கள். ஆனால், ஒன்றையும் காணோம். இந்த அமைச்சர்கள் இந்தப் பதவிகளுக்கு வர முன்னமேயே ஒரு சம்பவம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்தது. இதை இவர்கள் படித்து அறிய வேண்டும்.

இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதே நாடாளுமன்றத்தில், பிரதமராகச் சில காலம் இருந்த போது, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, உடனடியாகப் பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களைப் பிரித்து  பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வழங்குகின்றேன் என வாக்குறுதி அளித்தார். அதற்கு “மனோ கணேசன் திட்டம்” எனப் பெயரும் வைக்கின்றேன் எனவும் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.  “ஐயா சாமி, எனது பெயர் வேண்டாம், எனது மக்களுக்கு காணி கொடுங்கள். அது போதும்” என்று அப்போதே நான்  திருப்பி அவருக்குச் சொன்னேன்.  இன்று எங்கே அந்தப் பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நில காணிகள், மிஸ்டர் பிரசிடென்ட்?

கடைசியாக இப்போது மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், அதிகாரிகளை அழைத்து பணிப்புரை விடுத்தார். இன்று, அங்கே புத்தர் சிலையைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள். அங்குள்ள அந்த அம்பிட்டிய பிக்கு வாயைத் திறந்தால் தெருச்சண்டியன் மாதிரி தூஷணம் பேசுகின்றார். மேய்ச்சல் தரையில் பாரம்பரியமாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு நிலம் கையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இப்போது கெளதமரையும் அங்கே இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது, மயிலத்தமடு, “மாடு”களுக்கே அடுக்காது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனத்தில் இருந்து நாடு திரும்பிய உடன் அவரை நான் சந்திக்க விரும்புகின்றேன். சந்தித்து இந்தக் கேள்விகளை எல்லாம் அவரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நானே எழுப்பவுள்ளேன். எடுத்த எடுப்பிலேயே நாடாளுமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் இவற்றை எழுப்பி, தனிப்பட்ட முறையில் அவரை நன்கு அறிந்த நான் நாட்டின் ஜனாதிபதியை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை தொடர்பில், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் இருந்தாலும் அவர் என்னிடம் சொல்வார் என நம்புகின்றேன். அவற்றை அப்படியே வெளியே வந்து சொல்ல  அவர் விரும்பாவிட்டால் நான் வெளியிடவும் மாட்டேன்.

ஆனால், இவை பற்றிய தெளிவை நான் தேடுகின்றேன். கொழும்பாக இருந்தாலும், மலைநாடாக இருந்தாலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், எங்களுக்கு இனியும் இருட்டறையில் நின்று வழி தேடி தடுமாற முடியாது. ஆகவே, எத்தனை பிரதமர் ரணில்? எத்தனை ஜனாதிபதி ரணில்? எத்தனை வாக்குறுதி? மலைநாடும், மயிலத்தமடுவும் உங்கள் பட்டியலில் கடைசியா?” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More