நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது எனக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வெலிக்கடை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டாரவும், சுஜித் சஞ்ஜய பெரேராவும் மிரிஹான பொலிஸ் நிலையத்திலும் தங்களது முறைப்பாட்டை அளித்துள்ளனர்.
எனினும், இந்த மோதல் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளமையால் முறைப்பாடுகள் வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, வெலிக்கடை பொலிஸ் நிலையம், நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்துடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தாக்குலுக்குள்ளானார் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா நாடாளுமன்றத்தில் உள்ள நூலகத்துக்கு அருகில் வைத்து தம் மீது தாக்குதல் நடத்தினார் என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.