விபத்துக்கள், சத்திர சிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்துச் செல்கின்றமையால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றது என்று இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிகரிப்புக்கு ஏற்ப குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், இதனால் இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் இரத்த வங்கியினர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியைச் சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். ஆனால்,தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் ஆகும். இது ஆபத்தான நிலையாகும்.
இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாமலுள்ளது.
ஒரு அனர்த்தம் நிகழுமாயின் அதனால் ஏற்படும் குருதியிழப்பை ஈடுசெய்வதற்கு எம்மால் முடியாமல் போகலாம்.
ஆகவே, இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.” – என்றனர்.