முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வயோதிபர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைவேலி, மயில்குஞ்சன் குடியிருப்பில் நேற்று இரவு 11 மணியளவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய தம்பிப்பிள்ளை மார்க்கண்டு என்ற குடும்பஸ்தரே அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் பணியாற்றி வருகின்றார் எனவும், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பணப் பரிமாற்றம் தொடர்பான தகராறால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது சந்தேகநபர் பொல்லாலும், கோடரியாலும் வயோதிபர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் வயோதிபரின் வீட்டு வாசலையும் சந்தேகநபர் அடித்துச் சேதப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரான இராணுவச் சிப்பாயைப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபரும் காயமடைந்துள்ளமையால் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.