செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

2 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 7, 8ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டபோது  செங்கலடி மற்றும் நகரில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த தேரர்கள், கால்நடை பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (27) வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட நிறைவு விழாவுக்கும்,  8ஆம் திகதி செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 வருட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக வருகை தந்திருந்தார்.

அந்நாட்களில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையில் இருந்து சட்ட விரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு கோரி ஒருபுறமும், அந்த பகுதியில் சட்ட விரோதமாக குடியேறிய சிங்கள மக்கள் தமக்கு அந்த நிலம் வேண்டும் என கோரி மறுபுறமும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குபவர்களுக்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அதனையடுத்து, நீதிமன்றமானது, வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதியளித்ததோடு, அதனை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் போக்குவரத்து விதிமுறையின் கீழ் அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கட்டளையிட்டது.

இந்நிலையில், 7ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் கல்லூரிக்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையிலான மேய்ச்சல் தரை மயிலத்தமடு, மாதவனை சட்டவிரோத குடியேற்றவாசிகள் கொண்ட குழுவினர் குறித்த கல்லூரிக்குள் நுழைய முயற்சித்தபோது, அவர்களை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி, நீதிமன்ற கட்டளையை சுட்டிக்காட்டியபோது, அதையும் மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‍அதனை தொடர்ந்து 8ஆம் திகதி செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்துக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தபோதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில்  ஈடுபட்டவர்களை செங்கலடி – வாழைச்சேனை பிரதான வீதி கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில் பொலிஸார்  வீதித்தடையை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியபோது, பண்ணையாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர், அரசியல்வாதிகள் நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், 7ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் இரு தேரர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, அவர்களிடம் முறைப்பாடு பெற்று, குறித்த 6 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கியுள்ளனர்.

அதேவேளை 8ஆம் திகதி நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்துகாணாமல்  ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி, பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் உட்பட 34 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த 34 பேரிடமும் வாக்குமூலங்கள் பெற்று, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர் சுற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற  அழைப்பானை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு இரு வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து அவர்களிடம் வாக்குமூலங்களை பெறும் முக்கிய நடவடிக்கையினை நேற்று சனிக்கிழமை (28) பொலிஸார் ஆரம்பித்தனர்.

அவ்வேளை, வழக்கு தொடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானைகளை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More