மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாவனல்லை – ஹிங்குல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அந்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.
அந்த மோட்டார் வாகனம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி பலத்த சேதத்தை விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசிக் கம்பத்திலும் மோதியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தைச் செலுத்திய மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.