“சீனாவில் இருந்து இலங்கைக்குக் கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்துக்குக் கடலுணவு இறக்குமதி செய்யப்படாது” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்துக் கையளித்தனர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தபோதே இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென் ஹொங் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் வடக்கு மாகாணத்துக்கு வந்துள்ளேன். சீன பௌத்த மக்களின் 50 ஆயிரம் உணவுப் பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.
கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கினோம். நாம் தற்போது வழங்கும் உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும். உணவுப் பொதி 7 ஆயிரம் ரூபா பெறுமதியானது.
உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா காலத்தில் நீங்களும் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றிருப்பீர்கள்.
பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது. சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.
1 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 50 இலட்சம் ரூபா உணவுப் பொருட்களாகவும், 50 இலட்சம் ரூபா மீனவர்களுக்காகவும், 50 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்துக்காகவும் சீனா வழங்கவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கையின் கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்குக் கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்துக்குக் கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.
சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கின்றோம்.
சீனத் தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்கத் தயாராகவுள்ளனர் என்று நம்புகின்றேன்.” – என்றார்.