ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு ஓடிச் சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் தான் சுகயீனமடைந்திருப்பதாகக் கூறி அனுமதிக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, எண்டர்ன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அச்சினி துஷாரி என்ற யுவதியே ஹோமாகம நீதிமன்ற வீதியில் வைத்துக் கழுத்தறுத்துப் படுகொலை செய்ய்பட்டுள்ளார்.
யுவதியின் காதலனே இந்தக் கொலையைப் புரிந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது சட்டைப் பையில் இரத்தக் கறை காணப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, கிரிந்திவெல, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கே.ஏ.சஞ்சீவனி எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார் எனவும், அந்தப் பெண் கணவரின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவரின் தாயார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு அறிவித்தார். அதையடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பூகொட நீதிமன்ற பதில் நீதிவான் கமல் சம்பந்த பெரும சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
சடலத்தை வத்துபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்ட நீதிவான், அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் (கணவரின் சகோதரன்) கொலைக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளார் எனவும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கிரிந்திவெல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.