இலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் வடக்கு – கிழக்கிலிருந்து வருகை தந்த பெருமளவிலான மக்களின் பங்கேற்புடன் நல்லூர் கிட்டு பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாள் செயல் முனைவின் இறுதி நாளான 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வடக்கு – கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும்” எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராண்டு பூர்த்தி நாளில் வடக்கு – கிழக்கு மக்களின் பங்கேற்புடன் “இலங்கையின் வடக்கு – கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம்” எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு வாழ் பொதுமக்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.