“தற்போதைய சூழ்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு நஞ்சூட்டப்படலாம். அந்த வழியில்கூட நான் கொலை செய்யப்படலாம்.”
– இவ்வாறு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
அவர் மேலும் கூறியதாவது:-
“இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எந்த அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் எமக்குத் தடையைக் கோரியது? அப்படித் தடையைக் கோரியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்டம், ஒழுங்கு இல்லையா? நான் இடைக்கால சபையை அமைக்க முன்னர் பலருடன் பேசினேன்.
தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு நான் செல்வது கிடையாது. அங்கு எனக்கு நஞ்சூட்டப்படலாம் என்ற அச்சம் இருக்கின்றது. ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றாலும் அங்கு நீர் கூட அருந்தமாட்டேன். ஏனெனில் அதில் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம். அந்த வழியில்கூட நான் கொலை செய்யப்படலாம்.
நான் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் செல்லவுள்ளேன். எனது இடைக்கால சபைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் அர்ஜுன ரணதுங்கவைக் கொண்டு கிரிக்கெட்டை முன்னேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு வேலையைச் செய்ய முடியாவிட்டால் இந்த அமைச்சும் எனக்குத் தேவையில்லை. ஜனாதிபதிக்கும் சரியான தகவல்களை வழங்காமல் சில அதிகாரிகள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஜனாதிபதி செயலகத்துக்குக் கூட செல்ல முடியாத நிலை இருக்கின்றது. பாதாள உலகக் குழுவைக் கொண்டு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம். எனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இன்னும் அதற்குப் பதில் இல்லை.” – என்றார்.