இந்தச் செய்தி முழு மருதமுனை பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று மாலை மருதமுனையில் இருந்து ஒலுவில் பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் கல்முனை அஷ்ரப் ஞாபகத்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 19 வயது இளைஞர்கள் என்பதுடன் இவர்கள் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதுவதற்குத் தயாராக இருந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருதமுனை, ஸம்ஸம் வீதியைச் சேர்ந்த றிபாய் முஹம்மட் அமர் அவுஸ் (வயது 19), மருதமுனை பிரதான வீதியைச் சேர்ந்த ஸமீம் அதான் மிப்ரித் (வயது 19) ஆகிய இரு இளைஞர்களுமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.
இளைஞர்களின் உடல்கள், மரண விசாரணை அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு இன்று காலை 7 மணிக்கு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.