திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த உயிரிழந்தவருடன் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட மற்றைய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அந்த வழக்கை வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து மாற்றப்பட்ட வேண்டும் என்ற சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட பலரும் ஆஜராகியிருந்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரால் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.