செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸார் நால்வர் விசாரணைப் பொறிக்குள்!

வட்டுக்கோட்டை பொலிஸார் நால்வர் விசாரணைப் பொறிக்குள்!

1 minutes read

வட்டுக்கோட்டை இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், தற்போது விசாரணைகளுக்காக, யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்,  யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள், இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொலிஸ் நிலையம் ஒன்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெற்று குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் அதே இடத்திலே கடமையாற்றினால் அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள்

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை. பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More