யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று அளவீடு செய்யப்படவுள்ளது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்துக் கோஷங்களை எழுப்பினர். இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.