இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்று நடைபெற்றது.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு தொடர்பிலும், அதையொட்டி நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மாநாட்டுக்கான முன் ஆயத்தங்களைச் செய்வதற்கும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் உள்ள மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ப.சத்தியலிங்கம், த.கலையரசன், சேவியர் குலநாயகம், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசியல் குழுவில் உள்ள இரா.சம்பந்தன், கே.வி.தவராசா ஆகியோர் பங்கேற்கவில்லை. சம்பந்தன் சுகவீனம் காரணமாகவும், தவராசா சிங்கப்பூர் சென்றமையாலும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் பொருளாளர் கனக சபாபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ளஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் ஆகியோரும் இன்றைய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை.
திருகோணமலை மாவட்டக் குழுவே கட்சியின் தேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவாகச் செயற்படுகின்றது என்பதால், எஸ்.குகதாசன் தலைமையிலான மாவட்டக் குழுவும் அழைப்புக்கிணங்க இன்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டது.