இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று இடம்பெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கடும் போட்டியிருக்கும் என்று கருதப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. தமிழரசின் தலைவருக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கு இன்று புதியவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
பொதுச்செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஞானமுத்து ஸ்ரீநேசன், சண்முகம் குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோர் அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட வாய்ப்பிருப்பதாக நேற்றுச் செய்திகள் வெளி வந்திருந்தன.
ஆனால், போட்டியில்லாமல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்திலேயே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்றும், மாற்று வேட்பாளர் இருக்கும் பட்சத்தில் தேர்தல், வாக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றும் குகதாசன் நேற்றிரவு தெரிவித்தார்.
இதேவேளை, ஏகமனதாகவோ அல்லது தேர்தல் மூலமோ எவ்வாறு தெரிவு செய்யப்பட்டாலும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இரா.சாணக்கியன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பதவிக்கான தேர்தலுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சின் இன்றைய பொதுக் குழுக் கூட்டம் எதிர்பார்ப்பு மிக்கதாக மாற்றம் பெற்றுள்ளது.