“மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) பிற்பகல் கொழும்பில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
வற் வரி உள்ளிட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்தப் பேரணி ஆரம்பமாகி முதல் 15 நிமிடங்களிலேயே ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகையும், நீர்த்தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது. இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுடனும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதமும் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ பேரணி உரையை நிகழ்த்தினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதிவான் நீதிமன்றங்களால் இன்று தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
கொழும்பில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும், நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.