செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘பெப்ரவரி 4’ தமிழர் தேசத்தின் கறுப்பு நாள்!

‘பெப்ரவரி 4’ தமிழர் தேசத்தின் கறுப்பு நாள்!

2 minutes read

இலங்கையின் இன்றைய சுதந்திர தின நாளைக் கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத் தீயிலிருந்து தமிழர் தாயகத்தைக் காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்புக்காகவும் இன்று கிளிநொச்சி, இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள அனைவரையும் உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம் என்று யாழ். பல்கலைக்கழக ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேற்படி மாணவர் ஒன்றியத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து இலங்கை, 04.02.1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நாள் தமிழ்த் தேசிய இனம் திறந்தவெளி சிறையில் இடப்பட்ட நாள்.

ஒட்டுமொத்த நாட்டினுடைய இறைமை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தனித்தே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளிலே ஒப்படைக்கப்பட்டமை என்பது தமிழினம் மீதான தொடர்ச்சியான இன ஒடுக்கு முறைகளுக்கே வழிகோலியது.

2009 ஆண்டு இனப் படுகொலை எனும் கோர முகமாய் அந்த ஒடுக்கு முறை வெளிப்பட்டதென்பதும் யாவரும் அறிந்த ஒன்றே.

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்பது சிங்கள குடியேற்றத் திட்டங்கள், இராணுவ மயமாக்கல் முதல் கொண்டு தொடங்கிய இனவழிப்புச் செயன்முறை, 2009 ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தை சூறையாடுவதில் மேலும் தீவிர நிலை கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் (பெப்ரவரி 04, 2024) இன்றைய நாளைக் கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துக் கறுப்புதினப் பேரணியை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றோம்.

1. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள – பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போது கையறு நிலையில் உள்ள கிழக்கு மாகாணம் மீதான ஆக்கிரமிப்புக்கள் தாமதமேதுமின்றி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வேண்டும்.

2. ஈழத் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

3. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.

4. தமிழர் தாயகத்தில் முடிவற்றுத் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள – பௌத்த மயமாக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கான உரிய தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை முன்னின்று நடத்தும் அரச இயந்திரத்தையும் அதன் நிறுவனங்களையும் கண்டிக்கின்றோம்.

தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத் தீயிலிருந்து தமிழர் தாயகத்தைக் காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்புக்காகவும் இன்று கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள அனைவரையும் உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More