யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதான பிரபாகரன் கௌசிகன் என்ற நபர் நேற்று கல்கிஸை, யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பிரபா என்ற புனைபெயரால் அழைக்கப்படுகின்றார். மேலும், ஆவா கும்பலில் அவர் கோயின்சி தம்பா என்று அழைக்கப்படுகின்றார்.
ஆவா கும்பலின் முக்கிய புள்ளியான மேற்படி சந்தேகநபருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திலும் தலா இரண்டு திறந்த பிடியாணைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அவர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளார் என்றும், கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை, கொலை முயற்சி, ஆபத்தான கும்பலுடன் இயங்குதல், வாகனங்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய வழக்குகள் தெலிப்பளை, சுன்னாகம், மானிப்பாய் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக ஏற்கனவே பதிவாகியுள்ளன.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர் வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்கிஸை, யசோரபுர வீட்டின் ஒரு பகுதியை மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவுக்குப் பெற்றுக்கொண்டுள்ளார்.
வெளியில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்து தலைமறைவாக இருக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை, அவர் வெளிநாட்டுக்குச் தப்பிச் செல்லும் நோக்கில் இந்தப் பகுதியில் தங்கியிருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.