“யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னிந்திய நடிகைகளும், நடிகர்களும் எங்களுடைய மக்களுடைய வலிகளையும் துன்பங்களையும் உணர்ந்துகொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணத்தில் நீங்கள் தங்கியுள்ள இடங்களை முற்றுகையிடுவோம் எனவும், மீண்டும் ஒரு தடவை நீங்கள் யாழ். மண்ணில் கால் பதிக்க முடியாமல் செய்து விடுவோம் எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றேன்.”
– இவ்வாறு அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி மு.தம்பிராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நாளை இந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்துக்கு வருகை வந்துள்ள திரைப்பட நடிகர்கள், நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் ஒருவருக்கு ரூபா 30 ஆயிரம் அறவிடப்படும் என்று குறித்த தனியார் நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி மு.தம்பிராசா நடத்திய ஊடக சந்திப்பிலே மேற்படி விடயத்தை வன்மையாக கண்டித்ததோடு குறித்த செயற்பாடு இடம்பெறுமானால் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு நடிகர், நடிகைகள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் உலக அளவில் பெயர் பெற்ற இடமாகும். இந்தியத் திரைப்படங்களில் கூட யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்கள்.
ஆனால், இங்கே சினிமா நடிகர், நடிகைகளை அழைத்து வந்து அவர்களோடு புகைப்படம் எடுப்பதற்குப் பணம் பெறுகின்ற கேவலமான செயலை குறித்த தனியார் நிறுவனம் நடத்த முற்படுகின்றது.
இன்றைக்கும் வலிகாமம் வடக்கில் இரவோடு இரவாக பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அந்த நிலத்தில் குடியேற முடியாத அவலங்களோடு நில மீட்புக்காகப் போராடி வருகின்றார்கள்.
அப்படியான மக்களுடைய காணிகளை அபகரித்து தன்னுடைய சர்வாதிகார ஆட்சியிலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கே விசாலமான சொகுசு மாளிகையை அமைத்திருந்தார்.
அந்த மாளிகையை இன்றைக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரணில் அரசு குறித்த தனியார் நிறுவனத்துக்குத் தாரைவார்த்துள்ளது.
ஆனால், 14 இற்கும் மேற்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய நிலத்துக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான இழப்பீடுகளோ அல்லது எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளோ இதுவரை செய்யப்படவில்லை.
இந்தநிலையிலே இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ள இந்திரன் என்பவர் எங்களுடைய மக்களுடைய கலாசாரத்தையும் அழிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டைச் சீர்குலைக்கும் முகமாக இவ்வாறான செயற்பாட்டை நடத்த முற்படுகின்றார்.
உண்மையிலேயே நாங்கள் இந்தியக் கலைஞர்களுக்கோ அல்லது சினிமாத் துறையினருக்கோ எதிரானவர்கள் அல்லர்.
எங்களது போராட்டங்களையும், தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் பல தென்னிந்தியத் திரைப்படங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பல தென்னிந்தியப் பாடகர்களும் ஈழத்து வலிகளை வெளிக்கொணரும் முகமாக அல்லது போராட்டத்துக்கு ஆதரவாக தங்களுடைய குரல்களிலே பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
ஆகவே, வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் முகமாக இவ்வாறான பிரபல இசை கலைஞர்கள் வந்து இங்கே நிகழ்ச்சி நடத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர்.
இந்த மண்ணிலே அவர்கள் வந்து எங்கள் கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்வதையும் நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கின்றோம். ஆனால், இவ்வாறான நிகழ்ச்சிகளின் பெயரால் எங்கள் மக்களை வைத்து வியாபாரம் செய்வார்களானால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு எந்தளவுக்குச் சென்று போராடவும் ஒருபோதும் பின்னிற்காது என்பதையும் இந்த வேளையிலே தெரிவித்துக்கொள்கின்றோம்.
உண்மையிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்து இங்கே முதலீடுகளைச் செய்பவர்களால் எங்களுடைய மக்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பையும் அல்லது பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டுமே அல்லாமல் இளைஞர்களைத் திசை திருப்பும் முகமாக எமது தமிழ் இளைஞர்களின் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் முகமாக இவ்வாறு நடிகைகளோடு கட்டணம் கட்டி புகைப்படம் எடுக்கின்ற செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த இசை நிகழ்வானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்விக்கவும் அவர்களை ஆற்றுப்படுத்தவும் இலவசமாகவே நடத்துகின்றோம் என்று சொல்லி நிகழ்வு ஒழுங்குகளைச் செய்தவர்கள் இன்றைக்கு ரிக்கற் விநியோகிப்பதை நாங்கள் கண்டுகொண்டிருக்கின்றோம்.
அவர்கள் இந்த மண்ணிலே இருந்து இருப்பதையும் சுரண்டிக்கொண்டு போவதற்கா இந்த நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நுழைந்துள்ளது என்ற கேள்வியையும் நான் இந்த வேளையிலே எழுப்ப விரும்புகின்றேன்.
எனவே, இன்றைக்கு தென்னிந்திய சினிமாத்துறை உலக அளவில் வளர்ந்துள்ளமைக்கு எங்களுடைய ஈழத் தமிழர்களுடைய பங்களிப்பு மிகையாகாது என்பதை பல பிரபலமான சினிமா நடிகர்களும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள்.
ஈழத் தமிழர்களால்தான் தாங்கள் இன்றைக்கு உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கும், கோடிக்கணக்குகளிலே சம்பளம் பெறுவதற்கும் ஈழத் தமிழர்கள்தான் காரணம் என்பதைக் கூறியுள்ளார்கள்.
குறிப்பாக இன்றைக்கு இந்திய சினிமாவையே கட்டி ஆளுகின்றவர் ஓர் ஈழத் தமிழர். அவர் பல கோடிக்கணக்கிலே அங்கே முதலீடு செய்வதனால்தான் பல இந்திய சினிமா நடிகர்கள் மட்டுமின்றி சினிமாத் துறையை நம்பி இருப்பவர்கள் கூட பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே அப்படியாக சினிமாத்துறைக்குப் பங்களிப்பு செய்கின்ற ஈழத்தமிழர்களைக் கேவலப்படுத்தும் முகமாக இந்தத் தனியார் நிறுவனத்தினுடைய செயற்பாடு இடம்பெறுகின்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இவற்றைத் தென்னிந்திய நடிகைகளும் நடிகர்களும் உணர்ந்து கொண்டு எங்களுடைய மக்களுடைய வலிகளையும் துன்பங்களையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் நீங்கள் தங்கியுள்ள இடங்களை முற்றுகையிடுவோம் எனவும், மீண்டும் ஒரு தடவை நீங்கள் யாழ். மண்ணில் கால் பதிக்க முடியாமல் செய்து விடுவோம் எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.