இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான விசேட பேச்சு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் 5 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக மீனவர்களும், தமிழக மக்களும் கச்சதீவு திருவிழாவைப் புறக்கணித்தும் உள்ளனர். இந்நிலையிலேயே இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் இலங்கைக் கடற்றொழில் அமைச்சருடன் இந்தியத் தூதுவர் நேற்று விசேட பேச்சு நடத்தினார்.
இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா – இலங்கை இடையே ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இரு நாட்டு மீனவர்களின் நலன் சார்ந்து மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்சினையை அணுகுமாறு இந்தியத் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
அதேவேளை, இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்தியத் தூதுவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இந்திய மீனவர்கள் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிடப்பட்டுள்ளமையால் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. இது தொடர்பில் இனி ஜனாதிபதி மாத்திரமே முடிவெடுக்க முடியும். அதேநேரம் இலங்கை மீனவர்களின் விருப்பத்துக்கு மாறாக என்னால் முடிவெடுக்க முடியாது” – என்று கூறினார்.
வடக்கு மாகாணத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.