இந்தியாவின் நயவஞ்சகத்தால் உயிரிழந்த ஈழத்தமிழன் சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் பூதவுடல் நேற்று நண்பகல் நாட்டை வந்தடைந்தது. எனினும், மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையால் பூதவுடல் யாழ்ப்பாணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிக்கிரியைகள் தொடர்பில் இன்னும் முடிவில்லை.
யாழ். வடமராட்சி – உடுப்பிட்டியில் அமைந்துள்ள சாந்தனின் இல்லத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாளை இறுதிக்கிரியைகள் இடம்பெற வாய்ப்பில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரே இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்பவிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரின் பூதவுடல் நேற்று முற்பகல் 10.20 மணிக்குச் சென்னையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் எடுத்து வரப்பட்டது. அந்த விமானம் முற்பகல் 11.40 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பூதவுடல் நண்பகல் 12 மணிக்குப் பின்னர் விமான நிலையப் பொதிக் காப்பகப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து பூதவுடலைப் பெறுவதற்காக உறவுகள் சென்ற வேளை அதைப் பெறுபவர் பெயரில் சாந்தன் என்று சென்னையில் உள்ள விமானச்சிட்டை நிறுவனம் குறிப்பிட்டிருந்த காரணத்தால் பூதவுடலை உறவுகளால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நெருக்கடியைச் சென்னையில் இருந்து வந்த சட்டத்தரணி, சென்னையுடன் தொடர்புகொண்டு சரியான முறையில் ஆவணத்தைத் தயாரித்து அதனைத் தொலைநகல் மூலம் பெற்றார். அதன்பின்னர் பூதவுடல் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது மாலை 6 மணியைத் தொட்டுவிட்டது.
இதன் பின்பு இரவே நீதிபதி பார்வையிட்டு மரண விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவின் பிரகாரம் மரண விசாரணைக்குக் குடும்ப உறவுகள் இருவர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெறும் மரண விசாரணையின் பின்பே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியால் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு சட்ட வைத்திய அதிகாரி வழங்கும் சான்றிதழை மீண்டும் நீதிபதியிடம் சமர்ப்பித்து அனுமதி வழங்கப்பட்ட பின்பே பூதவுடல் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும். இதனால் பூதவுடல் யாழ்ப்பாணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.