மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலை யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் அவரது சகோதரி ஆரத்தி எடுத்துப் பெற்றுக்கொண்டமை அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்திருந்தது.
சாந்தனின் புகழுடல் நேற்று மாலை சகோதரியின் வீட்டுக்கு வரும்போது, “அண்ணா வாறார்; என் தெய்வம் வீட்டுக்கு வருகின்றது. யாரும் அழக்கூடாது” – என்று அதன்போது உருக்கத்துடன் சகோதரி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில், ஓம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.
அதேவேளை, தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த சாந்தனின் தாய் பல ஆண்டுகளுக்குப் பின் உயிரற்ற உடலைக் கண்டு கதறி அழுதார்.
சாந்தனின் புகழுடல் ஊர்தி யாழ். வடமராட்சியை நேற்று மாலை வந்தடைந்த பின்னர் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வவுனியாவில் நேற்றுக் காலை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி, ஏ – 9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் கடந்த 28ஆம் திகதி காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சாந்தனுடைய வருகைக்காக அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாகக் காத்திருந்த நிலையில் இறுதியில் சடலமாகவே அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இறுதிக்கிரியைகள் நிறைவு பெற்றதும் புகழுடல் எடுத்துச் செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து புகழுடல் சாந்தனின் பூர்வீக இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.
வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்குப் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.