இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்தார்.
சாந்தனுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி உரையாற்றும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய நாள் 16 வருடங்களுக்கு முதல் எங்களுடைய மண்ணிலே மாமனிதர் கிட்டினன் சிவநேசன் இலங்கையின் ஆழ ஊடுருவும் படையினரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த நாடாளுமன்றத்தினுடைய உறுப்பினராக இருந்த சிவநேசன் அநியாயமாகக் கொல்லப்பட்டார்.
இதேவேளை, இந்தியாவிலேயே சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முதல் மரணத்தைத் தழுவிக் கொண்ட சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்திக்கொள்கின்றேன்.
வரலாறு பல மனிதர்களைப் படைக்கின்றது. வரலாறு பல மனிதர்களுக்குப் புதிய பாதைகளைத் திறந்து விடுகின்றது. ஆனால், தன்னுடைய தாயையும், ஊரையும், உறவினரையும் பார்க்க முடியாது 20 வயதில் புறப்பட்ட ஒரு இளைஞன் 53 வயதைக் கடந்து சடலமாகத் தாயகம் வந்துள்ளார்.
நோய் வாய்ப்பட்டிருந்த சாந்தனை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம்.
அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம்.
ஆனால், இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் சாந்தன் சடலமாக இலங்கை வந்துள்ளார்.
இவ்வாறான இழப்புகள் இனியும் தொடரக் கூடாது. திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கையின் அரச அதிகாரிகளிடம் நாம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.” – என்றார்.