இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மகா சிவராத்திரி சைவ, இந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களிலே ஒன்று. அந்தத் தினத்திலே உலகெங்கும் வாழும் சைவ, இந்து மக்கள் ஆலயங்களிலே இரவு முழுவதும் விழித்திருந்து சமய அனுட்டானங்களிலே ஈடுபடுவர். அவ்வாறான ஒரு வேளையிலே பொலிஸார் ஆதி லிங்கேஸ்வரர் தலத்தினுள் நுழைந்து அது தொல்பொருள் ஆய்வுக்குரிய பாதுகாக்கப்பட்ட இடம் என்ற போர்வையிலே அங்கு அனுட்டானங்களிலே ஈடுபட்டிருந்த மக்களிற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதனைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் பூசைகளினைக் குழப்பி உள்ளனர். வழிபாட்டில் ஈடுபட்டோரினை பலவந்தமாக வெளியேற்றியும் கைது செய்துமுள்ளனர். இவை யாவும் அந்த மக்களின் சமய ரீதியிலான உரிமைகளை மோசமாக மீறும் செயல்களாகும் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சம்பவம் வெறும் வன்முறையும், அத்துமீறலும் மாத்திரம் அல்ல. இது இலங்கையில் தொடரும் சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கருத்தியலின் ஆகப் பிந்திய வன்முறை வடிவங்களிலே ஒன்று. சிறுபான்மையாக இருக்கும் மக்களின் மத உரிமைகளை பாதிக்கும் செயன்முறைகளினை இலங்கையினை ஆட்சி செய்யும் அரசுகள் காலங்காலமாக மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
இந்த செயன்முறைகளினால் இந்து சமயத்தவர் மாத்திரமல்லாது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் யாப்பினைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களின் மத உரிமைகளை மீறும் போக்குக்கள் யாப்பின் கருத்தியலுக்குள்ளேயே பொதிந்து போய் இருக்கிறது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.
வெடுக்குநாறிமலைச் சம்பவம் இலங்கை அரசின் மதவாதக் குணாம்சத்தினால் ஏற்பட்ட ஒரு கட்டமைப்பு சார் விடயமாகவே பார்க்கப்படல் வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கினைப் பௌத்த மயமாக்கம் செய்வதன் மூலமும், சிங்கள மயமாக்குவதன் மூலமும் இந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் வலுவிழக்கச் செய்யும் செயன்முறைகளிலே இலங்கை அரசுகள் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்தச் செயன்முறைகளின் ஒரு வடிவமாகத் தொல்பொருளியல் ஆய்வு என்ற போர்வையில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் தலத்தினையும் ஏனைய பல சைவ, இந்து மக்கள் வழிபடும் தலங்களையும் சிங்கள பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் அண்மைய சில வருடங்களாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
கொழும்பில் இருந்து, மையப்படுத்தப்பட்ட முறையிலே, இராணுவக் கட்டமைப்புக்களின் துணையுடன், சிங்கள பௌத்தக் கருத்தியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தொல்பொருளியல் செயன்முறைகளின் போது வடக்குக் கிழக்கிலே பல சந்ததிகளாக இந்தத் தலங்களிலே தமது சமய அனுட்டானங்களில் ஈடுபடும் மக்களின் உரிமைகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த விதமான இடமும் வழங்கப்படுவதில்லை. மாறாக தொல்பொருளியல் ஆய்வு என்பது இந்த மக்களின் மீதும், அவர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் செயன்முறைகளின் மீதும் ஒரு வன்முறையாகவே ஏவப்படுகிறது. இந்த வன்முறையின் ஒரு விளைவே கடந்த சிவராத்திரி தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களும் கைதுகளும்.
கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக வழக்குகள் எதுவுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், வடக்குக் கிழக்கிலே தொல்பொருளியல் ஆய்வு என்ற பெயரிலும், வனப் பாதுகாப்பு என்ற பெயரிலும், மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரிலும் ஏனைய வடிவங்களிலும் இடம்பெறும் சிங்கள பௌத்த மயமாக்கற் செயன்முறைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோருகின்றது.
இனவாதத்தினையும், மதவாத்தினையும் முன்னெடுக்கும் அரசியலமைப்பும், அரசுக் கட்டமைப்பும் மாற்றப்பட்டால் மாத்திரமே இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, சமய ரீதியிலே சமத்துவம் மிக்கவர்களாக வாழ முடியும். வெடுக்குநாறிமலைப் பிரச்சினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும் இவ்வாறான அரசியல் மாற்றங்களினை வலியுறுத்துவதன் மூலமாக இனவாதத்தினையும், மதவாதத்தினையும் முறியடிக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோருகின்றது.” – என்றுள்ளது.