செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பதவி ஆசை எனக்கு இல்லை; பதவி என்னைத் தேடி வந்தது! – ரணில் தெரிவிப்பு

பதவி ஆசை எனக்கு இல்லை; பதவி என்னைத் தேடி வந்தது! – ரணில் தெரிவிப்பு

5 minutes read
“நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதிப் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை. அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன. இதுதான் உண்மை.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

”இந்த மைதானத்தில் இன்று ஏராளமானோர் குவிந்துள்ளனர். கடினமான காலங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். அந்த இக்கட்டான காலகட்டம் முடிவடையும் போது முன்னோக்கிச் செல்வதற்கு தேசிய கருத்தொருமைப்பாடொன்றை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

நான் அரசைப் பொறுப்பேற்ற போது, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளோம். இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சு நடத்தி மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம். அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக, சலுகைகளைப் பெற முடியும்.

இந்தப் பயணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. மேலும், இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்துள்ளது. அவர்களுக்கு இந்த சிங்கள – தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிங்கள – தமிழ்ப் புத்தாண்டில் அந்தக் அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும். இக்கட்டான காலங்கள் இருந்தபோதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, புரட்சியை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். மேலும், விவசாய நவீனமயமயப்படுத்தி, 10 ஆண்டுகளில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கிறோம்.

மேலும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதன் பணிகளில் நான் தலையிடவில்லை. தவறு செய்வர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அது எனக்கு பிரச்சினையும் இல்லை. மேலும் நாடாளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த தற்போதைய சட்டங்களைத் திருத்தவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவை நாட்டின் சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் எனக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கட்சி பேதமின்றி எனக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களிடம் குறுகிய அரசியல் நோக்கமில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

2020 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாங்கள் பிளவுபட்டோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் உண்மையைச் சொல்லி முன்னோக்கிச் செல்வோம் என அன்று நான் கூறினேன். திட்டமிட்டு செயற்பட்டால் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வர முடியும் என சுட்டிக்காட்டினேன். ஆனால், பலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

இந்தக் கருத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது. சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். சிலர் எங்களுக்கு வாக்களித்தனர். இன்று ஒரே ஒரு கட்சிதான் இருக்கின்றது. அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி. டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் பெற்றுக்கொடுத்த நாட்டைப் பாதுகாப்பதற்கும் ஜே.ஆர். ஜெயவர்தன உருவாக்கியது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் நாம் முன்வந்துள்ளோம். அதற்காகத் தான் உங்கள் ஆதரவைக் கோருகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடமும் திட்டம் இல்லை. இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தேன். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரிடம் பேசினேன். எங்களுக்கு உதவ விரும்புவதாக அவர் தெரிவித்தார். உலக வங்கியும் இதனைத்தான் சொன்னது. நான் இரண்டு முறை ஜனாதிபதியை (கோட்டாபய ராஜபக்ஷ) சென்று சந்தித்தேன். இந்தத் தகவல்களை அவருக்கு முன்வைத்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக சில அதிகாரிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அடுத்து 2022 மே 9 ஆம் திகதி என்ன நடந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். பிரதமர் பதவியை ஏற்க முடியாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அநுரகுமார திஸாநாயக்க அந்தப் பதவியை கோரவில்லை. அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் எப்படி பிரதமர் பதவியை ஏற்க முடியும்? காலிமுகத்திடலுக்கு கூட அவர்களால் செல்ல முடியவில்லை.

அன்றைய தினம் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் மகளின் திருமண விழாவில் நான் கலந்து கொண்டிருந்தேன். நான் ஹோட்டலுக்குள் இருப்பது வெளியில் இருந்த அனைவருக்கும் தெரியும். யாரும் வந்து என்னை வெளியேறுமாறு சொல்லவில்லை. அதன் பின்னர் நான் கிளம்பினேன். கொம்பனித்தெரு பகுதியில் இருந்தவர்களிடமும் பேசிவிட்டு தான் நான் சென்றேன். ஏனென்றால் நாங்கள் எப்போதும் உண்மையைத்தான் கூறினோம். மக்களை ஏமாற்றவில்லை. தோல்வியை ஏற்க தயாராக இருந்தோம்.

பின்னர், பொதுஜன பெரமுன பின்வரிசை எம்.பி.க்கள் என்னைச் சந்தித்து ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தனர். நான் பிரதமராக பதவியேற்றேன். இதை ஏற்றுக்கொள்ள வேறு யாரும் முன்வரவில்லை. மொட்டுக் கட்சி ஏற்க முடியாது. சஜித், அநுர ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மேலும், சம்பந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரால் அதை ஏற்க முடியாது. எனவே, பிரதமர் பதவியை ஏற்றேன். முடிந்தால் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதியிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதனை விரும்பவில்லை.

நிதி அமைச்சர் என்ற முறையில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசினேன். அதன் ஆதரவு கிடைத்தது. இந்தநிலையில்தான் 2022 ஜூலை 9ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்தது. அந்த எதிர்ப்பு முன்னாள் ஜனாதிபதியை பதவி நீக்க நடந்ததா அல்லது என்னைப் பதவி நீக்க நடந்ததா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறினார். எனது வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

நான் அரச கட்டடமொன்றில் பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு அரச அதிகாரிகள் அஞ்சினார்கள். ஆனால், விகாரையில் நான் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றேன்.

நான் தேர்தலுக்குச் செல்ல நினைத்தேன். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நினைத்தேன். அரசை அமைத்து முன்னேற முடியும் என்று கருதினேன். அவர்கள் உடன்படவில்லை. சிலர் மாத்திரம் அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். திரும்பி வந்த அமைச்சர்கள் மனுஷ மற்றும் ஹரீன் ஆகியோரை வரவேற்கின்றேன்.

டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிப்பதாகச் சிலர் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதி பதவி வழங்க முடியாது என ஜி.எல்.பீரிஸ் எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க முடியாது என சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கொண்டன.

இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரிடமும் உதவி கேட்டேன். மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் பேசியபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் மட்டுமே பேச முடியும், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மஹிந்த ராஜபக்ஷ உகந்தவரல்ல என்று சொல்பவர்கள் அன்று அவரை நாடிச் சென்று ஆதரவு கேட்டனர். நான் அவரிடம் தொலைபேசியில்தான் பேசினேன். எனவே, பொய்யைப் பரப்ப வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்திக்குக் கூறுகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அந்தக் கட்சியில் இடமில்லை.

கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்தார். அந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று நான் கூறினேன். அதன்படி திங்கட்கிழமை (நாளை) எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து இது குறித்து ஆராய்வதற்காகக் கடிதங்களை அனுப்பினோம். அப்போது ஹர்ஷ சொல்வது போன்று செயற்பட முடியாது எனப் பண்டிதர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார். நான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க மாட்டோம் என எனது செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். பண்டிதரின் பேச்சுக்கு அந்தக் கட்சி கட்டுப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இடமிருக்கின்றதா?அந்தக் கட்சியில் அனைவரும் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

நிதி தொடர்பான முதன்மையானவர் ஓரங்கட்டப்பட்டபோது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும். இன்று ஐக்கிய மக்கள் சக்தி சிறு தரப்பினரிடம் சிக்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் அங்கு இல்லை. எனவே, எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டைக் கடனில் இருந்து காப்பாற்றுவோம். அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்.” – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார, முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் உரையாற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More