மூவரும் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே நாடு திரும்புகின்றனர்.
முற்பகல் 10 மணிக்குச் சென்னை விமானம் நிலையத்துக்கு அழைத்து வரப்படும் இவர்கள், விமானம் மூலமாக முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைவார்கள்.
இந்தத் தகவல்களை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான இலங்கையர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்களில், சாந்தன் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நாடு திரும்பவிருந்த நிலையில் காலமானார். ஏனையவர்களான முருகன் என்ற சிறீகரன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமிலேயே அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு கடவுச்சீட்டு பெற உதவ வேண்டும் என்று பல தரப்பினரிடமும் கடிதம் மூலம் கோரியிருந்தனர். அத்துடன், முருகனின் மனைவியான நளினி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை துணைத் தூதரகத்துக்கு மூவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கடவுச்சீட்டு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மூவரையும் இலங்கை திரும்ப மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்தே இன்று இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடு திரும்புகின்றனர்.