செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை!

புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை!

2 minutes read
“தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் டீல் பேசினாரா?’ – என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் சார்பாக இன்னொருவர் (எனக்கு ஆட்களைத் தெரியாது) செய்தி அனுப்பியிருந்தார். உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.

என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த டீல் பேசப்பட்டது.

புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றனபோல்தான் தெரிகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது  அவர்கள் மறுத்தும் உள்ளனர். அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது.

சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரசார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.

அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள்.

தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More