“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், நெத்திலி மீன்களே சிக்கி வருகின்றன. உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக வாழும் நிலை காணப்படுகின்றது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இன்னும் நீதி நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை.
குழுக்கள் அமைக்கப்பட்டும், விசாரணை நடத்தப்பட்டும் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. நீதிக்காக மக்கள் போராடி வந்தாலும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சஹ்ரான்தான் இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், அவருடன் தொடர்பைப் பேணியவர்கள், சஹ்ரான் குழு சுதந்திரமாகச் செயற்பட இடமளித்தவர்கள், தாக்குதல் மூலம் பிரதிபலன் அடைந்தவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நீதி நிலைநாட்டப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டாலும் சாதாரண அரசியல்வாதி, சிரேஷ்ட அதிகாரிகள், செயலாளர்களால் நீதியை வழங்க முடியாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனில், பயங்கரவாதத்தை ஒடுக்கியவர்கள், அத்துறைசார் அனுபவம்மிக்கவர்களால்தான் அதனைச் செய்ய முடியும்.
எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது நாட்டு மக்களுக்காகக் கடமையை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளவன் நான். எனவே, எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் இந்தக் கடமையை நிச்சயம் செய்வேன்.” – என்றார்.