இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் இந்தச் சந்திப்பு கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, எதிர்வரும் காலங்களில் எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துபூர்வமாக ஆதரவைக் கேட்பது சிறந்தது என்றும் பஸில் ராஜபக்ஷ இதன்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அரசின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.