மூன்று நாள் பயணமாக வடக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (25) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ். இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் வந்துள்ள ஐனாபதி இன்று என்னை வந்து சந்தித்திருந்தார். அவர் வந்திருந்த கூட்டங்களுக்கே நான் போகவில்லை. இருந்தும் அவர் என்னை வந்து சந்தித்தமைக்கு என்ன காரணம் எனப் பலரும் நினைப்பார்கள்.
எனது உடல் நிலையை அறிந்துகொள்வதற்காகவே தான் வந்ததாக அவர் சொல்லியிருந்தார். அப்படியாகத்தான் சந்திப்பில் சில விடயங்கள் குறித்து பேசியிருந்தோம். இந்தச் சந்திப்பை அரசியல் சந்திப்பு எனச் சொல்ல முடியாது.
வடக்கு, கிழக்கு மக்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுது சம்பந்தமாகத்தான் அவரது கருத்துக்கள் இருந்தன. ஆனால், அரசியல் ரீதியான விடயங்கள் என்று வருகின்றபோதும் கூட அதனையும் பொருளாதாரத்துக்குள்ளேயே கொண்டு செல்லப் பார்க்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் சம்பந்தமாகப் பேச்சு வந்தபோது நீங்கள் ஒரு பொது வேட்பாளரின் பெயரைத் தீர்மானிக்க முடியுமா என என்னிடம் அவர் கேட்டார். அதன் தொடராக உங்களால் அது முடியாது என்றவாறாகக் கதைத்தும் இருந்தார்.
அதாவது தமிழ் மக்கள் சேர்ந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்தக் கூடிய ஒற்றுமை அல்லது ஒருமித்த தீர்மானத்தை எடுக்கக்கூடிய தகுதி, தகைமை இல்லை என்ற முறையில் அவர் பேசியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறியபோது நான் சிரித்துவிட்டு எனக்கு அதைப் பற்றி தெரியாது என்றும், அதற்கான குழுக்கள் யாரை நிறுத்துவது என்பது சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனை அவர்கள்தான் தீர்மானித்து எங்களுக்குக் கூற வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கு, மற்றைய இரண்டாவது, மூன்றாவது வாக்குகளை மற்றைய சிங்கள வேட்பாளர்களுக்கு அளிப்பதையும் அவர் வரவேற்றார். ஆனால், எங்களால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்பதுதான் அவருடைய ஒட்டுமொத்த எண்ணமாக இருந்தது.
அது எங்களுக்கு வெட்கக்கேடான ஒரு விடயம். அதை அவர் மனந்திறந்து சொல்லியிருந்தார்.
தான் இன்னுமொரு முறை ஜனாதிபதிப் பதவிக்கு வருவதென்றால் சிறுபான்மையினருடைய ஆதரவு தனக்குக் கட்டாயம் தேவை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், சிறுபான்மையினர் அவரிடம் எதிர்பார்க்கின்ற பலதையும் நான் சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர் மாகாண சபைத் தேர்தலைக் கட்டாயம் நடத்தப் போகின்றார் என்றும், அதற்கு முன்னர் ஐனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தவுள்ளார் என்றும் கூறினார்.
மாகாண சபையிலும் மத்தியிலும் இருப்பவர்களைச் சேர்த்து என்னென்ன விடயங்கள் நடைபெற வேண்டும் என்றும், பொருளாதார ரீதியான விடயங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் கதைத்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக நான் சிலவற்றைக் கூறினேன். அதாவது 13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல்தான் 13 பற்றி நீங்கள் கூறினீர்கள், ஆனால் சஜித் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று கூறியிருக்கின்றார். எமது மக்களைப் பொறுத்தவரையுல் அந்த வேற்றுமை உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினேன்.
“அப்படியில்லை. 13 பற்றி சஜித் கூறும் போது கூட 13 இல் பொலிஸ் அதிகாரத்தை உள்ளடக்கவில்லை. அப்படி 13 ஆவதை முழுமையாக அமுல்படுத்துவது உங்கள் நிலைப்பாடு எனில், அதனை சஜித்திடமே நேரடியாகச் சென்று கேளுங்கள்.” – என்று ஜனாதிபதி கூறினார்.
ஆக இது சம்பந்தமாக இருவருக்கும் (ரணில், சஜித்) இடையில் என்ன நடக்கின்றது என்றே எனக்குத் தெரியவில்லலை. ஆக மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல்தான் எனக்குத் தெரிகின்றது.
அரசியல் ரீதியான ஒரு முன்னேற்றத்தை நாங்கள் பெறக் கூடாது, எங்களை நாங்கள் வலுவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்பது போன்ற சிந்தனையில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். அவரைப் போலவே தெற்கிலுள்ள மற்றையவர்களும் உறுதியாகவே உள்ளனர்.
இதன் காரணமாகத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், தேர்தல் முடிந்தவுடன் காற்றில் பறக்கப் போகின்றவை என்பது தெரியும்.
ஆகவே, இந்த நிலை மாற வேண்டும், எங்களது நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் பொது வேட்பாளரை நிறுத்துகின்றோம். ஆனாலும், எங்களுடைய தமிழ் மக்கள் மத்தியிலும் சில சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன.
ஆனால், அதனைத் தீர்த்துக் கொண்டு பொது வேட்பாளரை நிறுத்தும் பணியை முன்னெடுத்துச் செல்வோம். அதனால் பல நன்மைகள் எங்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக புலத்திலும் தாயகத்திலும் உள்ள எங்கள் மக்களிடத்தே ஒற்றுமையை நாங்கள் கொண்டு வர முடியும். எங்களுக்கு என்ன வேண்டும் என்பது சம்பந்தமாக சர்வதேச ரீதியாகத் தமிழ் மக்களள் தங்கள் நிலைப்பாடு, தீர்ப்பை வெளிப்படுத்த முடியும்.
இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பளரை ஆதரித்தால் அது உலகத்துக்கு எங்களுடைய மனோநிலையை, அபிலாஷைகளை வெளிக் கொணர்வதாக இருக்கும்.
இது மிக முக்கியமானதொன்று. ஆனால், அவர் இதனைச் சிரிப்போடு கடந்து சென்றுவிட்டார்.
வடக்கு, கிழக்கு தனித்துவம் பற்றி தனியாக அவர் எதனையும் கூறவில்லை. இது இவர் மட்டுமல்ல எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் அப்படித்தான். ஆகவே, எங்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்த பல திட்டங்கள் இருப்பதாக நான் கூறினேன்.” – என்றார்.