செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியாவினதும் ரணிலினதும் அடிவருடியே விக்கி! – கஜேந்திரன் சாடல்

இந்தியாவினதும் ரணிலினதும் அடிவருடியே விக்கி! – கஜேந்திரன் சாடல்

2 minutes read

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்குச்சாவடிக்கு இழுத்துச் செல்லவே தமிழ்ப் பொது வேட்பாளர் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் கட்டாயம் களமிறக்கப்படுவார் என்றும், இதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ‘வணக்கம் இலண்டன்’ வினவியபோதே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் முன்வந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக  விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில்
விக்கிரமசிங்கவைப் பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க  வடக்குக்கு வருகை தருகின்றபோது அவருக்குச் செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

விக்னேஸ்வரன், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால், குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயகப் படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசிய கருத்தியல்களை உள்ளடக்கி உள்ளே நுழைந்தவரே விக்னேஸ்வரன். ஆனால், இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார். உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றிப் பேசலாம் எனத் தெரிவித்தார்.

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையைத் தலையால் நிறைவேற்றுகின்றவர்தான் விக்னேஸ்வரன். ஆகவே, இந்தியாவைப் பிடி கொடுக்கக்கூடாது என்பதற்காக அவர் பொது வேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை எனக் கூறுகின்றார்.

தமிழ் மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் மனநிலையில் இன்று இல்லை. ஆகவே, தமிழ் மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்தப் பொது வேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் யாரும் நிறுத்தப்பட்டால் கூட அவர் 72 மணித்தியாலங்களுக்கு முதல் சொல்லக்கூடும், “எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு வாக்களியுங்கள்” – என்று கூறி விலகக் கூடும். இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்குமாறு அவர் கூறுவார்.

இதன் காரணமாக எதிர்நிலையில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்குக் கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகின்றது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More