தமிழர்களின் எதிர்காலப் பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13 ஆவது பொருளாதார உச்சி மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த உச்சி மாநாடு நாளை 7 ஆம் திகதி தொடக்கம் நாளைமறுதினம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உலகத்தின் 40 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மாநாடு பற்றி தெளிவூட்டும் ஆரம்பக் கூட்டம் கடந்த முதலாம் திகதி சுவிஸ்நாட்டில் ஓல்டன் நட்சத்திர விடுதியில் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் சுவிட்சர்லாந்துக்கான ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த முன்னோடிக் கூட்டத்தில் ஐரோப்பிய சுவிஸ்நாட்டு தொழில்முனைவோர்களும், பல புத்திஜீவிகளும், ஆர்வலர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
தமிழர்களின் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து 35 இற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன் இந்த மாநாட்டின் நிறைவு நாளில் இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்துகுத்த தமிழர்கள் இடம்பெயர்ந்த 40 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.