“ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் வேறு கட்சிகளுடன் சேர்ந்து இயங்கினாலும் அங்கிருந்து பலர் எம்முடன் வந்து இணைய இருக்கின்றார்கள்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
‘உங்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வேறு கட்சியுடன் இணைந்து விட்டாரா?’ – என்று சஜித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,
“அப்படி எதுவும் எனக்குத் தெரியாது. என்னை விடவும் உங்களுக்குச் சிறந்த புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்களிடம் இது தொடர்பில் வினவுங்கள்.
ஆனாலும், இங்கு நான் ஒரு விடயத்தைக் கூறி வைக்க விரும்புகின்றேன். அதாவது எம்முடன் இருந்து அங்கு செல்லும் சில பேருக்கு அப்பால் அங்கிருந்து பலர் எம்முடன் இணைய இருக்கின்றார்கள்.
அங்கு யார் யார் இணைந்தார்கள் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? எனவே, தெரியாத விடயங்கள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிப் பலனில்லை.” – என்றார்.